சனி, 12 அக்டோபர், 2019

கட்டுரை


குட்டி வந்தனாவும் ருசித்த சோறும்

உள்ளே நுழையலாமா என்ற யோசனையோடுதான் வாசலில் நின்றோம். சாய்வந்தனாவின் தாத்தா உடனே தயக்கத்தைப் போக்கினார். ‘உள்ள வந்துட்டு, காபி குடிச்சிட்டுதான் போகணும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். மறுப்புச் சொல்லுக்கு இடமில்லை. வாய் திறக்க முடியவில்லை. ‘இல்லங்க’ என்ற அசட்ட வார்த்தைக்குக்கூட வழியில்லை. நான்குபேரும் உள்ளே நுழைந்தோம். தாத்தாவின் மனம் எங்களை வீட்டின் உள்ளே இழுத்துப் போட்டது. அரக்கப்பரக்கத் தண்ணீர் கொண்டுவந்தாள் பாட்டி. வந்தனாவின் அத்தை முகமும் புன்னகையில் பூத்தது. அப்படியொரு வரவேற்பு.
இணையத் தமிழ்ப் பயிற்சிக்காகப் புதுக்கோட்டைக்கு வந்த இடத்தில் இப்படியொரு வரவேற்பு. இரண்டுநாள் பயிற்சி. முதல் நாள் பயிற்சி முடிந்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வந்து தங்கிக் கலந்துகொள்ளும் ஆண்களில் நாங்கள் நால்வர்தான். அதனால் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பலரின் வீடுகளில் யாருடைய ஒருவரின் வீட்டில் தங்க வைத்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டம். அவர்களின் திட்டப்படிதான் நாங்கள் மெட்டி மெட்டி வாசலில் நின்றோம்.
தாத்தா, பாட்டி, அத்தை ஆகியோருக்கு இடையில் திடுமெனக் குழந்தை ஒருத்தி ஓடிவந்து தண்ணீர் கொடுத்தாள். கொடுத்துவிட்டு வீட்டின் நடுப்பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த நாற்காலியில் அமர்ந்து ஊஞ்சல் ஆடினாள். படு சுட்டி. ஊஞ்சலில் ஆடிய ஆட்டமே அதற்குச் சாட்சி. ஆடிய ஆட்டத்தில் தாத்தாவை ஒரு இடி இடித்தாள். தாத்தா திரும்பிப் பார்த்தார். சட்டை செய்ததாகத் தெரியவில்ல. ம்க்கூ என்று தன் வேலை பார்த்தாள். முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது ஊஞ்சல். ஊஞ்சலுக்கு முன்னால் பாட்டி. பின்னால் தாத்தா. பக்கவாட்டில் அத்தை அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தாள். மசியும் குழந்தை அல்ல அவள் என்று புரிந்துவிட்டது. பெரியோர்களுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம்.
சிறிது நேரத்தில் இரவு உணவுக்காக அழைத்தனர். வீட்டிலே இரவுச் சாப்பாடு. ‘இல்லைங்கம்மா. பக்கத்துல இருக்கற கடையில போய்ச் சாப்பிட்டுக்கிறோம்’ என்று சொன்னபோது பாட்டி கோபித்துத் திட்டினாள். ‘வீட்டுக்கு வந்துட்டு வெளியில போயி சாப்பிடறதா’ என்று சொன்னாள். பாசக் கைதியாய் மகிழ்ந்த தருணம். 
விரிப்புகள் விரித்துத் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அமர்ந்தோம். பாட்டி இட்லிகள் வைக்கத் தாத்தாவும் அத்தையும் சட்டினியும் குழம்பும் இட்டனர். அந்த அன்பு உள்ளங்கள் உணவுகளைப் பரிமாறின.
நாங்கள் அமர்ந்தபோது சாய்வந்தனாவும் தட்டத்தைத் தூக்கிக் கொண்டு வந்தாள். அதைக் கவனித்து என் அருகில் அமரச் சொன்னேன். மசியமாட்டாள் என்று நினைத்த எண்ணம் மாயமானது. உடனே வந்து உட்கார்ந்தாள். நானும் அவளும் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். ‘வந்தனா சாப்பிடும்வரை நானும் சாப்பிடுவேன்’ என்றேன். வந்தனா சிரித்தாள்.

நான் சாப்பிட்டு முடிதேன். வந்தனா முடிக்கவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக