திங்கள், 21 அக்டோபர், 2019

கட்டுரை


காலை எழுதவுடன் சில பக்கங்களையாவது படிக்காமல் விடுவதில்லை. இரவு தூங்கும்முன் கொஞ்சமாவது படிக்க வேண்டும். இது நான் வகுத்த கறாரான திட்டம். இத்திட்டம் ஓரளவு சாத்தியப்பட்டுப்போனது. “சோறு திங்காமக்கூட இருக்கலாம். ஆனா படிக்க முடியாம இருக்க முடியாத அளவுக்கு வாசிக்கிற பழக்கத்து வரணும்” என்று என்று சொன்ன “எங்கள் ஐயா”வின்  குரல் காதைக் குடைந்துகொண்டே இருந்தது. இருக்கிறது. குடையும் காதைக் கொஞ்சம் கொஞ்சித்தான் பார்க்கலாமே என்று சில திட்டங்களைத் தீட்டியிருந்தேன் (என்ன திட்டம் என்று கேட்காதீர்கள்).
 என் திட்டப்படி “இதுவே சனநாயகம்”  என்ற நூலில் தொடங்கினேன். அதன் பாதை “கள்ளக் கணக்கு” வழியாகப் பயணித்தது. கள்ளக் கணக்கு காட்டிய பயணத்தின் முடிவில் சிறுகதை நூலுக்குப் போகலாமா என்று என் சேகரத்தில் தேடினேன். வேகமாகத் தேடிய ஓட்டத்தில் “வேப்பெண்ணெய்க் கலய”த்தின் வாசம் மூக்கைக் கொஞ்சம் பதம் பார்த்தது. முகர்ந்து பார்க்க எடுத்தேன். ஏற்கனவே படித்த நூல்தான். ஆனாலும் கதைகள் பிடிபடவில்லை. 2012இல் வெளிவந்த நூல். வெளிவந்து ஏழாண்டுகள் கடந்துவிட்டன (நேற்றுப் படித்த கதைகளே மறந்து போய்விடுகிறது. ஏழாண்டுக்கு முன் படித்த கதையா நினைவில் நிற்கப்போகிறது. அவ்வளவு மறதி. சீ, அவ்வளவு பொறுப்பின்மை).


வேப்பெண்ணெய்க் கலயம் க்கான பட முடிவு
அத்தொகுப்பின் முதல் கதை “அந்தரக் கயிறு.” அந்தரத்தில் கயிறு தொங்குமா, அந்தரத்தில் கயிற்றுக்கு என்ன வேலை, அந்தரத்திற்கும் கயிறுக்கு என்ன தொடர்ப்பு? இப்படியெல்லாம் கேள்விகள். சரி போ. கயிறு தொங்கினால் என்ன, தொங்காமல் இருந்தால் என்ன என்று கதைக்குள் சென்றேன். “கண்களை மூடிவதற்கே பயமாக இருந்தது” என்று பயத்தில் தொடங்கியது கதை. ஓ..! பயமாகத்தான் இருக்குமோ (இரவு 11 மணிக்குக் கதையைப் படித்துக்கொண்டிருந்தேன். பதினொரு மணிக்குப் பயம் கூடிக்கொள்ளுமா என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது). எதைக் காட்டி, எதைச் சொல்லி எப்படிப் பயம் கொள்ளச் செய்கிறார் என்று பார்த்துவிடலாம். பயத்துடன் நுழைந்தேன். கதை விரிகிறது. விரிந்த கதை பேருந்துப் பயணத்திற்குள் நுழைகிறது.
பயணத்தின்போது வரும் வாந்தியைத் தடுக்கக் கையாளும் அத்தனை வித்தையையும் விவரிக்கிறது அந்தரக் கயிறு. ஹா… ஹா… வாந்திப் பகுதியைப் படித்தபோது அத்தனை சிரிப்பு. வாந்தியைத் தடுத்தாட்கொள்ள நான் பட்ட பாடெல்லாம் ஓடி வந்து நின்றன. மனுசன் பிளந்து கட்டியிருக்கிறார். தடுத்தாட்கொள்ளும் வழிமுறை எலுமிச்சையில் தொடங்கி எச்சில் வழியாக நீள்கிறது (கையில் எச்சில் துப்பி முகர்ந்துகொள்ளுவது). நீளும் வழிமுறை கனவில் முடிவடைகிறது. அந்தக் கனவில் நீந்தும் கதை, பலரைக் கனவுக்கொலை செய்கிறது.
கதை நம்மின் கனவையும் சுட்டிக்காட்டிப் பல்லிளித்துப் போகிறது. கதைக்காரர் தன் அப்பனைக் கொலை செய்கிறார். அம்மாவைக் கொன்று பார்க்கிறார். இறுதியில் தன்னையும் கொலை செய்து புத்துணர்வு பெறுகிறார்.
அப்பப்பா…
திருவண்ணாமலையில் பணி செய்தபோது பயணித்த என் பேருந்து பயணங்களையும் நான் செய்த கனவுக்கொலைகள் ஒருமுறை மின்னி மறைகின்றன.

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nalla irukku aduthu eanna book padekka porenka. Paduchathula peducha book eanakkum sollaum.

      நீக்கு
    2. ஓ....! உனக்கும் வலைப்பூ இருக்கா? புலம்பெயர் இலக்கியங்களோடு ஒரு ஓட்டம் ஓடலாம்ன்னு இருக்கேன். ப.சிங்காரத்தோட புயலிலே ஒரு தோணியிலிருந்து ஆரம்பிச்சி தொ.பத்தினாதனின் தொப்புள்கொடி வரைக்கும் படிக்கலாம்னு இருக்கேன். பாப்போம்.

      நீக்கு
  2. பயத்துடனே படித்து முடித்தேன் நண்பரே...
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. ஓ...! எனக்கும் பதில் கிடைக்கிறாதா? மிக்க மகிழ்ச்சி. இந்த வலைப்பூவைப் போய் யார் பார்க்கப்போறாங்கன்னு நினைச்சேன். கில்லர்ஜி சார் ரொம்ப சந்தோசம்.

    பதிலளிநீக்கு